Tuesday, 3 January 2012

கூடங்குளம்


கூடங்குளம்- சாத்தானின் கல்லறை
                               -இரா.மோகன்ராஜன்

    அவர்கள் சமுத்திரத்தின் பிரதியென நுங்கும் நுரையுமாக திரண்டு நிற்கிறார்கள். அலைகளென ஆர்பரித்து ஓர்மையுடன் சங்கமிக்கும் ஆற்றாமையின் மனங்கள். சங்குகளில் புகுந்துவரும் காற்றென அதிரும் பெருமூச்சு! ஏழுகடலுக்கு அப்பால், ஏழு மலைகளுக்கு அப்பால் இருக்கும் கிளி கூண்டில் பொதிந்திருக்கும் உயிரென ஆடிக்கொண்டிருக்கிறது அவர்களது மரணத்துக்கான பொழுது.

     இடிந்த கரையெங்கும் மனமொடிந்த அவர்கள் தங்களின் துயர வாழ்வை சபித்தபடி வயிற்றை, உணவை, அன்றாட பிழைப்பை மறுத்துக்கிடக்கிறார்கள்., சாத்தானின் கல்லறையென நெடிது உயர்ந்து நிற்கும் அணுஉலை முன்பாக.

     தில்லியிலிருந்து எதிர்பார்த்தபடியே வருகிறார்கள் சாத்தானின் தூதுவர்கள். அவர்கள், தவறாது சாத்தானின் வேதத்தை தம் பங்கிற்கு காத்திருப்போரின் காதுகளில் இனிய பாடலென ஓதக்கூடும், ஓதச்செய்வார்கள். புதிய விடிவெள்ளியை நட்சத்தரத்தை தாம் கொண்டுவந்திருப்பதாக ஒருவேளை அவர்கள் கூறக்கூடும்.

     சாத்தானின் வேதம் கூடங்குளமெங்கும் பொங்கித் ததும்பி வழிந்து பெருகுகிறது. யாவருக்குமான பாடலாக.

     அண்மைக் காலத்தில் இவ்வளவு பெரிய மக்கள் திரளை வேறு எங்கும், எதற்காகவும் இப்படியான போராட்டக்களத்தில் சந்தித்திருக்க முடியாது. மக்கள் மயப்பட்ட ஒரு போராட்டம் இப்படித்தான் இருக்கமுடியும் என்பதற்கு கூடங்குளம் போராட்டம் ஒரு நேர்முக சாட்சியமாகியிருக்கிறது.

     நூற்றியிருபத்தேழுபேர் தொடர் உண்ணாநிலையிலும், மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றியும் முன்னெடுக்கின்றனர். உண்ணாநிலை பந்தலில் ஐயாயிரத்திற்கும் குறைவில்லாத பேர்களும், தினசரி வந்து கலையும் மக்கள் பத்தாயிரத்திற்கும் மேலாக ஒரு அற போர்க்களமாக காட்சியளிக்கிறது, இடிந்தகரைப்பகுதி. அக்டோபர் பதினெட்டு முதல் மூன்றாவது கட்டப் போரும் துவங்கித் தொடர்கிறது.

     நியாயத்தை காத்திரமாக வலியுறுத்தும், மீனவ சகோதரர்களே இப்போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. தன்லமற்ற போராட்ட குணம் மிகுந்த மனிதர்களிடமே சிக்கல்களை இயற்கை கையளிக்கின்றன போலும். ஏனென்றால் அவற்றை வெல்லும் மனஉறுதியும், கடப்பாடும் கொண்டவர்கள் அவர்களாகவே எப்பொழுதும் இருந்துவருகிறார்கள். இது போன்ற சிக்கல் நிமித்தமான போராட்டங்கள், ஊடகங்களின் அதீத பங்களிப்பு இருப்பினும், நகரப்பகுதிகளில் இவ்வாறான போராட்டங்கள் வெடிக்குமாயின் தோன்றுவன போலவே அவை விரைவாக நீர்த்துவிடும், என்பதே மெய்நிலையாகும்.

     தில்லியின் வட்ட அரசியல், போராட்டக்காரர்களை பலவாறாக பிரித்துவிட எண்ணுவதும், சாதி,வர்க்க, மதக் கண்ணோட்டங்களை கொண்டு அப்போராட்டக்காரர்களையும், போராட்டத்தையும் கொச்சைப்படுத்த வலைபின்னுகின்றன. கூர்மையடையும் போராட்டத்தை முனை மழுக்கச்செய்வதன் வழி, அரசும் அதன் வன்முறை எந்திரங்களும் கொஞ்சமும் அறமற்ற முறைகளை கையாளுகின்றன.

     உலகப்பெருமுதலாளியம், இந்த போராட்டத்தை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. அவை இவற் றை பெருங்கவலையுடன் உற்றுநோக்கி வருவதை உணர்ந்தாக வேண்டிய தருணம் இது. பல வல்லரசுநாடுகளை பின்னிருந்து இயக்குவதும், இயங்கச்செய்வதுமான இவர்கள்தாம், மூன்றாம் நாடுகளின் அரசுகளை தீர்மானிக்கும் சக்தியுமாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட இயலாது. தமது சுரண்டல் மற்றும், அதிகார கட்டமைப்பு சாம்ராஜியம் சரிவதையும் கேள்விக்குள்ளாவதையும் அக்கூட்டம் இரசித்திருக்காது.

     தத்தமது நாடுகளில் மக்கள் விழிப்புணர்வு, மற்றும், கெடுபிடியான சட்டத்திட்டங்களினால், அணுஉலை போன்றவற்றை அவ்வம் நாடுகளில் நிறுவ முயன்று தோற்ற பாகாசுர நிறுவனங்கள், தனது நாடுகளின் உதவியுடன் அணுஉலைகளைத் தூக்கி வந்து மூன்றாம் நாடுகளின் நிலங்களில், கல்லறைப் பூங்காக்களை அமைக்கின்றன. சொந்த நாடுகளில் செத்து சுண்ணாம்பாகிவிட்ட இந்த நிறுவனங்கள்தான் பாரத புண்ணிய பூமிக்கு வந்து உயிர் பெறுகின்றன என்பது மெய்சிலிர்க்கவைப்பதாகும்.

     புவிப்பந்தில், கடைகோடி மக்கள், அதிகார நலன்களின் கீழ் எவ்வாறு புழுவினும் கீழாக பயன்படுத்தப்பட்டுவருகிறார்கள் என்பதற்கு இவை போதுமானவையாகும். ஆதிக்க அதிகார நடுவங்கள், சக மனிதர்களில் ஒரு பிரிவினரை தனது அகோர பசிக்கு இரையாக்கும் வக்கிர அரசியல் அணுவர்த்தகம் போன்றவற்றில் பெருமளவு அரங்கேற்றி வருவதை வெளிப்படையாகவே காணமுடிகிறது.

     மனித அறங்கள் எதுளுவும் செல்லுபடியாகாத, விழுமியங்ககளுக்கு இடமில்லாத, தனி உலக மனிதர்கள் சிலர்தாம் இவ்வுலகை தம் கைகளில் வைத்திருக்கின்றார்கள். மக்கள் நலனா, வணிக நலனா என்று வருகையில், அவர்கள் தமது இரக்கமற்ற வணிக நலனை முன்நிறுத்துகிறார்கள். இவர்களே நாகரீக, நவீன அறிவியல் கோட்பாடுகளை, தத்துவங்களை முன்னிநிறுத்தம் புதிய அவதாரங்களாக, யுகபுருசர்களாக வலம் வருகிறார்கள்.

     இப்போது, சாத்தானின் கல்லறையிலிருந்தே புதிய தேவகுமாரர்கள் தோன்றுவதாக, சிலர் முன்னறிவிக்கிறார்கள். கோடாணுகோடி மக்களின் வாழ்வினில், இல்லங்களில் ஒளியேற்றும் விண்மீன்கள் தோன்றப்போவதாக அவர்கள் எவ்வித கூச்சமுமின்றி கூச்சலிடுகின்றார்கள்.

     ஆக்க அறிவியல் என்ற பெயரோடு வரும் அழிவின் அறிவியல், அதிகாரத்தின் துனைக்கொண்டு வினைபுரிகின்றது. எனவேதான் அதிகாரமும், அறிவியலும் பிரிக்க இயலாத ஒன்றாக இருக்கின்றது. அறிவியலும், அதன் தத்துவங்களும் இந்த நூற்றாண்டை தலைமை தாங்குகின்றன. அறிவியல் யன்னல் வழி நோக்கியே எதையும் விளங்கிக் கொள்ளும் போக்கே அதை அதிகார பீடத்திலொன்றாக்கி வளர்க்கிறது எனலாம்.

     உண்மையில் அறிவியல், அறிவியல் பார்வையென்பது. முற்போக்கானது என்று வலியுறுத்தப்படுகின்றன. அறிவியல்“ எந்த அடிப்படையில் முற்போக்கு முறையாகிறது என்ற உண்மையை யாராவது விளக்கினால் நன்று. அறிவியல் அல்லது அதனடிப்பயையிலான முடிவுகள் என்றைக்கும் மாறிக்கொண்டபடியே உள்ளது. இன்றய அறிவியல் உண்மை நாளைய புதிய அறிவியல் உண்மையின் வழி, முற்றிலும் வேறொன்றாக, அல்லது முன்பு கண்டறிந்த உண்மையை பொய்யாக, மாற்றிப்போட்டுவிடுகின்றது. இந்த நிச்சயமற்ற உத்தரவாதமற்ற போக்கு தன்னை புதுப்பித்துக் கொள்வதுபோல தோன்றினாலும், அது தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை பலி கொடுத்தபடியே செல்வதாகவிருக்கிறது.

     அறிவியலின் நம்பகத்தன்மை என்பது அதன் சோதனை முறையைக் கொண்டே உறுதிப்படுத்தப்படுகின்றது. ஒரு சோதனை முறையின் நம்பகத்தன்மை, இறுதியானதாக இருக்கவேண்டுமென்பதில்லை. இந்த அடிப்படைத் தன்மையே அறிவியலின் அதிகாரத்தை தீர்மானிக்கப் போதுமானதாக இருக்கிறது.

     இந்த முறை, அணுஆற்றலுக்கும் பொருந்துவது ஒன்றும் வியப்பானதல்ல.

     மனிதகுல உற்பத்தி மற்றும் தேவையின் பொருட்டு எழுந்த அறிவியல் முறையானது, அதிகாரத்திற்கும் நுகர்வுவெறிக்குமாக இட்டுச்செல்வதாகிவிட்டது. அறத்தை துறந்த அறிவியல் இங்கிருந்தே துவங்குகிறது எனலாம்.

     கையின் நீட்சியான கருவி கைநழுவிப் போய், இன்றைக்கு மூளையின் நீட்சியாக மாறிவிட்டிருக்கிறது. முதலாளிய உலகின், மூளை உருவாக்கும் “தேவை“ எல்லையற்றது. அசுரத்தனமானது. அது பிறப்பிக்கும் கருவிகளும் அவ்வாறானதே.

     மேலை தத்துவவாதிகளான பேக்கன், தெக்கார்த்தோ போன்றவர்கள் நவீன அறிவியல் இயற்கையை வென்றெடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர்கள். முதலாளித்துவ சூழலிலமையும் அறிவியலும், மக்கள் சோசலிச முறையில் அமையும் அறிவியலும் வெவ்வேறானவை என்பதை இக்கருத்தைக் கொண்டு நாம் முன்வைக்க இயலும். அது எவ்வாறெனில், சோசலிச சனநாயக அமைப்பு அறிவியல் மக்கள் சார்பானதாக, ஆக்கப்பூர்வமானதாக, அதிகாரம் கலக்காததாக இருக்கலாம். அதிகார மயப்பட்ட சூழலிலமையும் அறிவியல் ஆபத்து நிறைந்ததாக இருந்துவிடும் என்பதை மறுக்கவியலாது.

     இயற்கையோடு இணைந்த அதன் ஒத்துழைப்பைக் கோரும் அறிவியல் நிச்சயம், அதிகாரமற்றதாகவும், சகல உயிர்களோடும் ஒத்திசைந்து செல்வதாகவிருக்கும். ஆக, முதலாளித்துவ அறிவியல், சோசலிச அறிவியல் அல்லது, மக்கள் மயப்பட்ட, அதிகாரத்தை தம்முள் கலைத்துக் கொண்ட அறிவியல் என வகைப்பட்ட அறிவியல் கருதுகோளளவிலேயே செயற்பாட்டிற்கு வந்துவிடுவதை பார்க்கிறோம். மேலை அறிவியல், கீழை அறிவியல் என பண்பாட்டு ரீதியில் அறிவியலை சொல்லாமா தெரியவில்லை.

     மார்க்சியம் ஏற்றுக்கொண்ட அறிவியல், முதலாளிய சார்புகொண்ட இயற்கை சுரண்டலை முன்வைத்தது அல்ல என்பதில், இன்றைக்கு தேழர்களிடையே“ குழப்பம் நிலவுவதை காண்கிறோம். இயற்கை, உலகத்தை பற்றி கூறவந்த லெனின், “வஸ்துகளின் தொகுதியாக இந்த உலகத்தை புரிந்துகொள்ளக்கூடாது, மாறாக வஸ்துகளின் தொகுதியாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும்“ என்கிறார். உண்மையில் இயற்கையின் ஓருபகுதி வளத்தை சுரண்டுவதன் வழி, நம்மையும், நம்மை சுற்றியுள்ளவற்றையுமே சுரண்டுவதாகிறது.

     உழவில் கனரக இயந்திரங்கள் புகுத்தப்பட்டபோது, புவியின் இதயத்தில் கடப்பாறையை பாச்சுவது போல இருக்கிறது என்றார் காந்தி. காத்தியத்தின் அறிவியலும் இவ்வகையானதே.

     அணுவின் பயன்பாடு நெருப்பை போன்றது, அடுப்பையும் பற்றவைக்கலாம், வீட்டையும், கொளுத்தலாம், என்பது வழக்குச் சொல். நெருப்பில் நன்மைக்கான பகுதி, தீமைக்கான பகுதி என் தனியாக எதுவுமில்லை. இதுபோன்ற உத்தரவாதமற்ற போக்கே அறிவியலின் அரசியலையும் தீர்மானிப்பதாக உள்ளது. ஆற்றலை குறுக்குவது. விரிப்பது என்பது அதன், சக்தி அளவிலேயே பார்க்கப்படுவதில்லை, மாறாக அதை யார்? எந்த சூழலில் பயன்படுத்துகிறார்கள் என்ற அரசியலிலேயே அறிவியல் அடங்கியுள்ளது.  அணுஆற்றலானது, அதன் அரசியல் பயன்பாட்டின் வழி, இன்ணும் ஆபத்து நிறைந்ததாக மாறிக்கொண்டுள்ளது.

     அணுவானது, அதன் மையக்கரு பிளப்பின் ஆற்றலைவிட, அரசியல் தளத்திலேயே அபரிமிதமான ஆற்றலை வெளியிடுகிறது. என்பதைத்தான் கூடங்குளம் நமக்கு சொல்கிறது. அதனால்தான் நமது அணுசக்தி துறைத் தலைவர், சிறிகுமார் பானர்ஜி, வெளிநாடுகளில் பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

     சென்ற நூற்றாண்டின் அரசியலதிகாரத்தின் மதம், மதகுருமார்களின் இடத்தை இன்றைக்கு அறிவியலும், அறிவியலாளரும் பிடித்துள்ளமையை நமக்கு அப்துல்கலாமின் சனாதிபதி இருக்கை உணர்த்தியதென்றால், அவரை முன்மாதிரியாக சித்தரிக்கும் போக்கு அதைவிட மோசமானதாகும். அரசு ஒரு ஒடுக்கும் கருவியென்றால், அறிவியலும், அணுவும், அதற்கான ஒரு வழிமுறையாகவும், புதிய ஆயுதமாகவும் இருக்கின்றன. அறிவியலாளர்களோ புதிய கோட்பாட்டாளர்களாகின்றனர்.

     அணுஆற்றலின் ஒரு பகுதியை கொண்டுள்ள அறிவியலாளர்கள், அப்துல்கலாம் போன்றவர்கள் அரசின் சார்பில் ,அணுவின் சார்பில் கூடங்குளம் மக்களிடம் பேசவதென்பதே அணுவின், அதிகாரத்தின் பாதுகாப்பு, அச்சம் பற்றியதே தவிர, மக்களின் பாதுகாப்பு மற்றும், அச்சம் பற்றியல்ல என்பதே மெய்நிலையாகும்.

     கூடங்குளம் மற்றும் இடிந்தகரை போன்றவற்றைச் சுற்றிலும் ஏராளமான குழந்தைகள் இருக்கின்றார்கள், அவர்கள் எல்லோரும் அணுஉலையை இந்தியாவிற்கு விற்க வேண்டாம் என்று தொடர்புடைய நாடுகளுக்கு, தமது பிஞ்சு விரல்களால் கண்ணீர் நிரம்பிய சொற்களை சிறிய மரப்பெட்டிகளில் அடைத்து கடலின் வழி அனுப்பிவைத்துள்ளனர். நமது முன்னாள் சனாதிபதியும், அணுஅறிவியலாளரும், கனவு காணும் குழந்தைகளின் நாயகருமான அப்துல்கலாம் அவர்கள், அந்த பிஞ்சு கனவுகளுக்கு எத்தகைய பொறுப்பான உலகை கைவசம் வைத்திருக்கிறார்? அல்லது அப்பகுதி குழந்தைகளுக்கான பதிலாக வைத்துள்ளார்? எல்லாவற்றையும் விட அந்த குழந்தைகளை அவர் சந்திக்காமலே சென்றுள்ளது அவரது வருகையை ஒரு மோசமான கனவாக மாற்றிவிட்டது. அணுகுண்டுகளையும், குழந்தைகளையும் ஒருசேர உங்களால் நேசிக்கமுடியுமானால், ஒருவேளை உங்களால் அப்துல்கலாமையும் நேசிக்க இயலலாம்.

     அணுஆற்றல் அதன் அறிவியல் தன்மையை வெளிப்படுத்த இரண்டாம் உலகப்போரில் ஹிரோசிமா, நாகசாகி கிடைத்ததுபோல, உலகமயத்தின் போக்கில் அது அதன் அரசியல், மற்றும் அதிகாரத் தன்மையையும் சேர்த்து பரிசோதிக்கும் சாம்பல் மேட்டுக்களமாக அமையவிருக்கிறதோ கூடங்குளம்? தெரியவில்லை.

     கூடங்குளத்தில் கூடியுள்ள மக்கள் வெறும் அணு குறித்த அச்சத்தினால் மாத்திரம் உருவானவர்கள் அல்ல, ஒரு வெகுசன குடியரசின் கீழ் தமது நியாமான வாழ்வாதார சிக்கல்கள், அய்யப்பாடுகள் எவ்வளவு மோசமாக அதிகாரவர்க்கத்தினரால் கையாளப்படுகின்றது என்ற பெரும் கவலையின், அச்சத்தின், ஆதங்கத்தின், ஆத்திரத்தின் பாற்பட்டவர்களாகவே அவர்கள் காண்ப்படுகின்றனர். அதிகார வர்கத்தின் கோர முகத்தை மிக அருகிலிருந்து தருசிக்கும் வாய்ப்பை இன்றைக்கு அவர்கள் எல்லோரும் பெற்றிருக்கிறார்கள்.

     மிகவும் சிறுபான்மையினரான நடுத்தர, மற்றும் மேல்தட்டு மக்ளின் அரசும், அதன் உளவு, ஊடகம் மற்றும் இன்னபிற நிறுவனங்களும் இந்திய சமூக கட்டமைப்பை நன்கு உணர்ந்தவையாகும். அதனால்தான் எளிய சனங்களின் எளிய நம்பிக்கைகள் வழி சென்று இனம் பிரிக்கும் வேலையை, போராட்டத்தை கீழறுக்கும் வேலையை செய்கின்றன.

     இன்றைக்கு களத்தில் நிற்கும் சராசரிகள் யாவரும்  மின்நுகர்வில் மிக குறைந்த அளவிலான பயன்பாட்டிநுள் வருபவர்களாவர். பலரது இல்லங்களில் மின் இணைப்பு கிடையாது. நர்மதா அணை திட்டத்திலும், வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான பழங்குடிகள் மின்சார பயன்பாட்டையே அறியாதவர்கள். மேட்டுக்குடியினரின் தீரா மின் நுகர்வுப்பசிக்கு காவு கொடுக்கப்படும் இந்த பலி ஆடுகளே, அவர்களுக்கும் சேர்த்தே போராடுகிறார்கள் என்பதை மற்ற இரு குடிகளும்  அறிவார்களா?

     அணுமின் நிலைய விபத்தென்பது, இரசிய தொழிற்நுட்பத்தைவிட, அமெரிக்க தொழிற்நுட்பம் குறைவானதென்பதெல்லாம் ஓன்றும் இல்லை. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளியாக இருக்கமுடியும்? அணுமின்நிலையங்களால் கடற்கரையோர மக்களின், சுற்றுச்சூழலின், கடலோர பல்லுயிர் இனப்பெருக்க மண்டலத்தில் தீங்கு விளைவிக்குமென்றால், விபத்திற்கு பிறகான காலங்களில் சகல உயிர்களுமே பேதமின்றி, “யான் பெற்ற இன்பம்“ என்கிற வகையில் சேதங்களை உண்டாக்கும் எனவே இந்த போராட்டம் சகலருக்குமான நீதியின், கதறல் கோரிக்கையாகும். அரசியல், மத, வர்க்க நிலைகடந்த சிக்கல் இது என்பதை, உணர்ந்தாகவேண்டும்.

     கூடங்குளப் பணிகள் முடிந்து விரைவில் பணி துவங்கும் என்பதில் பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டிருப்பினும, அங்கு பணிகள் நிறுத்தப்படவில்லை, அவ்வாறு நிறுத்தப்படுமானால், மோசமான விளைவுகள் ஏற்படுமென அறிவியல், அரசியல் தரப்பு எச்சரிக்கிறது. மோசமான விளைவு என்பது, ஒப்பந்த நாடுகளால் ஏற்படுவதை இப்படி சொல்கிறார்களா எனபதை அவர்கள்தான் விளக்கவேண்டும்.

     எல்லாவற்றையும் மீறி அணுமின் உற்பத்தி துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அணுபாதுகாப்பு சார்பிலான உத்திரவாத்தை கலம் வழங்கியுள்ள போதிலும், இயற்கைபேரிலான உத்திரவாதத்தையும் அவரே கேட்டு(!) பெற்றாலும் வியப்பதற்கில்லை என்கிற நிலையில், அமெரிக்கா, அய்ரோப்பா நாடுகளில் எழுந்துள்ள முதலாளியத்திற்குள்ளான மறுமலர்ச்சிக் குரல்களை செவிமடுத்தவர்கள் நம்பிக்கையோடு கேள்வி எழுப்புகின்றனர். வால்ஸ்றீட்டை“ கைப்பற்றுவோம் போன்ற மேற்கத்திய சனநாயகம் சார்ந்த நடவடிக்கைகள் அவ்வம் நாடுகளின் சனநாயகப் பண்புகளுக்கேற்ப தீவிரம் கொள்கின்றன. அல்லது அமெரிக்க உளவு நிறுவனங்களின் தூண்டுதலுக்கேற்ப நிலைமை மாறுகின்றன. இங்கு நிலை முற்றிலும் வேறாகும். ஏற்கனவே இங்கு, சனநாயகம் வழியிலான அனைத்து போராட்டங்களும் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பதை அண்மைக் கால வரலாறுகள் பலவும் சொல்கின்றன.

     கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கெதிராக தற்போது கிளம்பியிருக்கும் கையெழுத்து வேட்டை முதல் மாநாடுகள், சாதி அமைப்புகளின்( இந்துநாடார், பிராமண) ஆதரவுவரை வரவிருக்கும் அனர்த்தங்களை சொல்வதாகவிருக்கிறது. இனி அந்த மக்களின் போராட்டங்கள் மிக கொடூரமாக, இரக்கமற்றவகையில் ஒடுக்கப்படும். அரச இயந்திரங்களின் கொடூர பற்களுக்கிடையே சிக்கி, சின்ன பின்னப் படப்போகின்றன அவை. வால்ஸ்றீட்“ சனநாயகம் இங்கு வென்றெடுக்கப்படாமல்போகலாம். அரசு இயந்திரங்கள், போராடும் மக்களை வெல்ல முடியாமல் போகலாம், எனினும் போராட்டத்தை வென்றடக்க அவர்களால் இயலும். யார் கண்டது! கூடங்குளம் போராட்டக்குழுவினரை ஒடுக்கும் நடவடிக்கைக்கு காந்தி சிரிக்கறார் என்று பெயர்கூட வழிமொழியப்பட்டிருக்கலாம்.

    

என் அறிமுகம்

அன்பு வலைப்பூ நண்பர்களே வணக்கம்.

 வலைப்பூவில் வண்ணத்துப்பூச்சி மொழி ஊடாக உங்களுடன் உரையாடவும், பகிர்ந்துகொள்ளவும் இதோ சிறகசைக்க துவங்கிவிட்டேன்.

வண்ணத்துப்பூச்சி மொழியில் பேசும் நான் இரா.மோகன்ராஜன் கடந்த பத்து வருடங்களாக அச்சு எழுத்து உலகில் இருந்து வருகிறேன்.

ஒரு படைப்பு  இலக்கியக்காரனாக என்னை அறிமுகப்படுத்தியது தினமணியில் முதல் பரிசு பெற்ற மின்மினியும் சில வண்ணத்துப்பூச்சிகளும் சிறுகதை. பின்னர் 7 ஆண்டுகள் நிலவொளி காலாண்டிதழ் பணி.

சாகித்திய அகதமி விருது பெற்ற பொன்னீலன் அண்ணாச்சியை நிலவொளி காலண்டிதழுக்காக நோ்கண்டது நூலாக வந்துள்ளது.

கீழத்தஞ்சை படைப்பாளிகள் சிறுகதை தொகுப்பான மின்மினியும் சில வண்ணத்துப்பூச்சிகளும் அகரம் பதிப்பில் நூல் தலைப்பில் மீண்டும் அச்சிறுகதை வெளியாகி உள்ளது.

சிறு பத்திரிகை உலகின் அதே தீவிரத்தோடு வலைப்பூவில் அமர்கிறேன்.

உங்கள்,
இரா.மோகன்ராஜன்